இணையமலர் செய்திகள்

இங்கே கிளிக் செய்யவும்..

Tuesday, January 25, 2011

ஊழல் புகாரில் சிக்கிய கல்மாடி ஒரு வழியாக அகற்றம்: மந்திரி சுறுசுறுப்பால் பனோட்டும் நீக்கம்



புதுடில்லி : காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதையடுத்து, போட்டி ஏற்பாட்டு குழு தலைவர் பதவியில் இருந்து, சுரேஷ் கல்மாடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஏற்பாட்டு குழு செயலராக பதவி வகித்த லலித் பனோட்டும் நீக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சர் மக்கான் எடுத்த அதிரடி நடவடிக்கை இது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கடந்தாண்டு அக்டோபரில் டில்லியில் நடந்தன. இதற்கான ஏற்பாடுகள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே துவங்கின. காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக குழு அமைக்கப்பட்டது.காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் கல்மாடி, இதன் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த குழுவின் செயலராக லலித் பனோட் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும், போட்டி ஏற்பாட்டு குழுவை சேர்ந்தவர்கள் பல கோடி ரூபாயை சுருட்டியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.லண்டனில் நடந்த காமன்வெல்த் தொடர் ஜோதி ஓட்டத்திலேயே ஊழல் நடந்தாகவும் புகார் கூறப்பட்டது. கட்டுமானப் பணிகள், விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது, வாகனங்கள் வாடகைக்கு அமர்த்தியது, ஒளிபரப்பு உரிமை வழங்கியது, விளையாட்டரங்கம் புனரமைப்பு பணிகள் என, அனைத்து பணிகளிலும் பெரிய அளவில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஊழல் புகார் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, சுரேஷ் கல்மாடி மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள், போட்டி ஏற்பாட்டு குழு அலுவலகம் ஆகியவற்றில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, சுரேஷ் கல்மாடியின் மீதான சி.பி.ஐ., பிடி இறுகியது. சுரேஷ் கல்மாடி பதவி விலக வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனாலும், தன் மீது எந்த தவறும் இல்லை என்றும், பதவி விலக முடியாது என்றும் சுரேஷ் கல்மாடி உறுதியாக தெரிவித்து விட்டார்.

அமைச்சர் பேட்டி: காமன்வெல்த் போட்டிகள் நடந்து முடிந்ததும், ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசு அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது.அப்போது, அஜய் மக்கான் விளையாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அமைச்சராக பதவியேற்ற ஐந்த நாட்களுக்குள்ளேயே அவர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டு குழு தலைவர் பதவியில் இருந்து சுரேஷ் கல்மாடியும், போட்டி ஏற்பாட்டு குழு செயலர் பதவியில் இருந்து லலித் பனோட்டும் உடனடியாக நீக்கப்படுவதாக, அஜய் மக்கான் நேற்று தெரிவித்தார். இருவரும், தங்கள் பொறுப்புகளை, போட்டி ஏற்பாட்டு குழு தலைமை நிர்வாகி ஜர்னல் சிங்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து அஜய் மக்கான் கூறியதாவது:காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடந்து வருகிறது.இந்த விசாரணை நடுநிலையானதாகவும், பாரபட்சமற்றதாகவும் இருக்க வேண்டும் என சி.பி.ஐ., விரும்புகிறது. எனவே, போட்டி ஏற்பாட்டு குழு தலைவர் பதவியில் இருந்து சுரேஷ் கல்மாடியும், செயலர் பதவியில் இருந்து லலித் பனோட்டும் உடனடியாக நீக்கப்படுகின்றனர். ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியில் இருந்தும் சுரேஷ் கல்மாடி நீக்கப்படுவாரா என, தற்போது கூற முடியாது. இது குறித்து, அட்டர்னி ஜெனரலிடம் சட்ட ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. தகுந்த நேரத்தில், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அஜய் மக்கான் கூறினார்.

விசாரணைக்கு தயார் கல்மாடி அறிவிப்பு : மத்திய அரசின் நடவடிக்கை குறித்து சுரேஷ் கல்மாடி கூறியதாவது: காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டு குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து, எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. இது தொடர்பான எந்த விசாரணைக்கும் தயார் என, ஏற்கனவே கூறியுள்ளேன்.விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவும் தயார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியில் இருந்து, நான் விலகப் போவதாக வந்த தகவல் உண்மை அல்ல. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியில் இருந்து, ஒருபோதும் நான் விலக மாட்டேன்.இவ்வாறு கல்மாடி கூறினார்.